அக்ரேசரின் நூலகம் சாவித்ரிபாய் பூலேயின் கனவை நனவாக்குகிறது..
பெண் கல்விக்காகவும், பெண்களின் உரிமைகளுக்காகவும் போராடியவருமான சாவித்ரிபாய் பூலேயின் பிறந்தநாளில். சாவித்ரிபாயை நாடு நினைவுகூருவது நல்ல விஷயம், அதேபோல் நினைவில் கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், சாவித்ரிபாய் பூலே மற்றும் அவரது கணவர் ஜோதிபா பூலே ஆகியோரால் தொடங்கப்பட்ட பெண்கல்வி மற்றும் உரிமைக்கான பிரச்சாரம் இன்னும் முழுமையடையவில்லை பல திசைகளில் முயற்சிகள் எடுக்கப்படவேண்டியதாக இருகின்றன, அந்த முயற்சிகளின் வேகம் சில நேரங்களில் மெதுவாகவும், சில நேரங்களில் வேகமாகவும் இருக்கிறது. சில சமயங்களில் நாம் சுதந்திரம் பெறுவதற்குப் பதிலாக, நாம் எதிர் திசையில் நகர்கிறோம் என்று தோன்றுகிறது. இத்தகைய எதிர்மறை சிந்தனைகளுக்கு மத்தியில், உத்திரபிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் உள்ள அக்ரேசர் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள சாவித்ரிபாய் பூலே நூலகம் குறிப்பிடத்தக்க ஒன்று.
சாவித்ரிபாய் 1831ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள நைகானில் பிறந்தார். 9 வயதில் ஜோதிபா பூலே என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகும் வரை சாவித்திரிபாய் கல்வி கற்கவில்லை. அவரது தந்தை உயர்சாதி ஆண்களுக்கு மட்டுமே கல்வி கற்கும் உரிமை உண்டு என்று நம்பினார், ஆனால் சாவித்திரிபாய் பூலேயின் கணவர் ஜோதிராவ் பூலே தலித்துகளுக்கும், பெண்களுக்கும் கல்வி மிகவும் முக்கியமானது என்று நம்பினார். கல்வியின் மூலமே அவர்கள் சுயசார்புடையவர்களாகவும், சுரண்டலில் இருந்து விடுபடவும் முடியும் என நினைத்தார். அவர் முதலில் தனது யோசனையை தன் இல்லத்திலிருந்து செயல்படுத்தினார். அவரது மனைவி சாவித்ரிபாய் பூலேவுக்கு கல்வி கற்பித்தார். அதன் பிறகு இருவரும் சமூகத்தின் நிலையை மாற்றப் புறப்பட்டனர். ஜோதிபா மற்றும் சாவித்ரிபாய் இருவரும் இணைந்து 1848ல் புனேவில் பாலிகா வித்யாலயாவை நிறுவினர். இப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட சாதியினரின் குழந்தைகள், குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி தொடங்கப்பட்டது. அந்தக்காலத்தில், சாதிய சமூகத்தின் குறுகிய மனப்பான்மையால் கல்வி கொடுக்கும் வேலை எளிதானதாக இருக்கவில்லை. சாவித்திரிபாய் பூலே துன்புறுத்தப்பட்டார். இல்லத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில், அழுகிய தக்காளி, முட்டை, குப்பை, மாட்டுச்சாணம், கற்கள் போன்றவற்றை அவர்மேல் சாதிய பிற்போக்குவாதிகள் எறிவது வழக்கமாக வைத்திருந்தனர். பள்ளிக்கு வந்தவுடன் வேறு துணிகளை பையில் வைத்துக்கொண்டு உடை மாற்றிக்கொள்வார். எதிர்ப்பும், தொல்லைகளும் சாவித்ரிபாய் பூலேயின் மனதை உடைக்கமுடியவில்லை. 1 ஜனவரி 1848 முதல் 15 மார்ச் 1852 வரை, சாவித்ரிபாய் பூலே மற்றும் ஜோதிபா பூலே எந்த நிதிஉதவியும், யாருடைய ஆதரவும் இல்லாமல் பெண்களுக்காக 18 பள்ளிகளைத் திறந்தனர். அந்தக்காலகட்டத்தில் இதுபோன்ற சமூக முன்முயற்சிக்கு வேறு உதாரணம் இல்லை.
பெண்களின் நிலையை மேம்படுத்த, சாவித்ரிபாய் பூலே 1852இல் "மகிளா மண்டல்", 1853இல் "குழந்தைக்கொலை தடுப்பு இல்லம்", 1855இல் ஜோதிபாவுடன் இணைந்து தொழிலாளர்களுக்கான "இரவுப் பள்ளி" ஆகியவற்றைத் தொடங்கினார். செப்டம்பர் 24, 1873இல், பூலே தம்பதியினர் சத்யசோதக் சமாஜை நிறுவியதன் மூலம் விதவை மறுமணம் செய்யும் பாரம்பரியத்தைத் தொடங்கினர். புனேயில் பஞ்சத்தின் போது குழந்தைகளுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் இலவச உணவு கிடைக்க ஏற்பாடு செய்தனர். 1897இல், புனேவில் கடுமையான பிளேக் தொற்றுநோய் பரவியபோது, சாவித்ரிபாய் பூலே தனது வளர்ப்பு மகன் யஷ்வந்தின் உதவியுடன் ஒரு மருத்துவமனையைத் திறந்தார். நோய்வாய்ப்பட்டவர்களிடம் சென்று, சேவைசெய்து, கவனித்து, மருத்துவமனைக்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்த செயல்பாட்டில், அவரும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டார், மார்ச் 10, 1897 அன்று, சாவித்ரிபாய் பூலே இந்த நோயால் இறந்தார். பல கட்டுரைகள் மற்றும் கவிதைகள் மூலம் சமூக உணர்வை வளர்த்தவர் சாவித்திரிபாய் பூலே. 'காவ்யா பூலே', 'பவன்காஷி சுபோத் ரத்னாகர்', 'மாதோஸ்ரீயின் பேச்சு', 'பவன்காஷி சுபோத் ரத்னாகர்' போன்றவை இவரது முக்கியப் படைப்புகள்.
175 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட இந்த சமூகப்பணிகள் நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன. நம்பிக்கையால் நம்மை நிரப்புகிறது. இதனையே இன்றைய நடைமுறையில் யோசித்து முயற்சிகள் செய்தாலும்கூட, தலித்துகள் மற்றும் குழந்தைகளின் கல்விக்கும், பொருளாதார தன்னிறைவுக்கும் பல இடையூறுகள் இன்றும் உள்ளன எனும்போது நமக்கு ஏமாற்றம் அளிக்கிறது. அக்காலத்தைப் போலவே இன்றும் நேர்மையான முயற்சிகள் தேவை என்பதை நம்மால் உணரமுடிகிறது. பூலே தம்பதியினரின் உறுதியால் பல கரங்கள் ஒன்று சேர்ந்தது நமக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கிறது. சமகாலத்தில் பூலே தம்பதியினர் கண்ட கனவு, மம்தா சிங் என்ற ஆசிரியையின் கண்களில் வளர்ந்து, அமேதி கிராமத்தில் ஒரு நூலகம் திறக்கப்பட்டதன் மூலம் மேலும் நனவாகியது. மம்தா சிங்கின் புதிய நூலக முயற்சி பலரால் கேலி செய்யப்பட்டது. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதபோது நூலகத்தால் என்ன பயன்? என்ற கேள்விகள் எழுந்தன. எந்த அமைப்பின் உதவியும் இல்லாமல், வசதியில்லாத குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் நாட்டின் முதல் பெண் ஆசிரியையான சாவித்ரிபாய் பூலேவின் பிறந்த நாளான ஜனவரி 3, 2018 அன்று புதியநூலகம் அமேதி கிராமத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட சேகரிப்பில் இருந்து சில புத்தகங்களும், சில பரிசு புத்தகங்களும் இந்த நூலகத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
கனவை நிறைவேற்றுவது மட்டும் அல்ல. உண்மையில் இந்த நூலகத்திற்கு வருகை தருவது ஒரு கனவு போன்றது. இந்தப் பயணத்தின் பொன்னான கதையை அனுபவ் விவரிக்கிறார். பள்ளி முடிந்தவுடன், குழந்தைகள் கூட்டமாக நூலகத்தை அடைகிறார்கள். புத்தகங்களுக்கிடையில் எட்டிப் பார்க்கும் குழந்தைகள் தங்களுக்கு விருப்பமான புத்தகத்தை எடுத்துக்கொண்டு, இடம் கிடைக்கும் இடத்தில் அமர்ந்து படிக்கிறார்கள். இதற்கு முன் சில குழந்தைகளை அன்புடன் அவர்களது இல்ல வாசலில் அழைத்து பெயர் மற்றும் முகவரியைக் கேட்டபோது, தயங்கித் தயங்கித் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர் ஆனால் இன்று நிலைமை மேம்பட்டுள்ளது என்கிறார் மம்தா சிங். பல நூற்றாண்டுகளாகப் பறிக்கப்பட்ட கல்வி எனவே புத்தகங்களின் ஈர்ப்பால் கவரப்பட்ட இந்தக் குழந்தைகள் நூலகத்திற்கு வந்தது என் கண்களையும் இதயத்தையும் நிறைத்தது என்கிறார் மம்தா சிங். தொடர்ந்து கூறுகையில் நூலகத்தை திறந்து வைத்தது மிகவும் பயனுள்ள வகையில் மக்களுக்கு அமைந்துள்ளது என்கிறார். சமுதாயத்தின் ஒவ்வொரு வகுப்பினரும், ஒவ்வொரு மட்டத்தினரும் ஒன்றாகப் படிக்கவேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. இது எனது பணி, இது எனது சாதனை எனவும் பெருமைகொள்கிறார் மம்தா சிங்.
அக்ரேசர் கிராமத்தில் திறக்கப்பட்டுள்ள நூலகம் நாட்டின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் பூலேயின் கனவை நிறைவேற்றி வருகிறது.
இந்த நூலகம் 24 மணி நேரமும் முற்றிலும் இலவசம். புத்தகத்தை இல்லத்திற்கு எடுத்துச் செல்வதற்கான பதிவேடு உள்ளது, அதில் புத்தகம் எடுத்தவர் புத்தகத்தின் பெயரை உள்ளிடுவார். புத்தகங்களை எடுத்துச்செல்வதும், திருப்பிக் கொடுப்பதும் குழந்தைகளின் பழக்கமாக மாறியிருக்கிறது.
அக்ரேசர் கிராமத்தில் உள்ள சாவித்ரிபாய் பூலே நூலகம் உண்மையிலேயே நம்பிக்கையின் மரம். தோற்றத்தில் சிறியதாகத் தோன்றினாலும் பலஜோடிக் கண்கள் கனவுகாணவும், அவற்றை நிறைவேற்றவும் தைரியத்தைக் கொடுக்கின்றது. புத்தகங்களால் குழந்தைகள் தங்களின் சமூகத்தை புரிந்துகொள்வதோடு சரியான பாதையில் நடக்கிறார்கள், அந்த பாதை நிச்சயமாக அவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்கும் பாதை. வானத்தில் ஓட்டைகள் இருக்கிறது, கல்லெறியும் ஆள்தான் தேவை என்பதை நிரூபிக்கும் முயற்சிதான் இந்த நூலகம். அத்தகைய முயற்சிகளை நம்மால் செய்யமுடியாவிட்டாலும், அத்தகைய முயற்சிகளுக்கு வணக்கம் செலுத்துவது சாவித்ரிபாய் பூலேவுக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்கும்.. நன்றி: News18 Hindi
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக