திருச்சியில் விசிக மாநாடு - மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா (INDIA) கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பு
             திருச்சி, ஜனவரி 26: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் `வெல்லும் ஜனநாயகம்' மாநாடு இன்று ஜனவரி 26 மாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் நடைபெறுகிறது. இதில், திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா (INDIA) கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.  கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொள்கிறார்கள். மேலும், திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் மாநாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த மாநாட்டின் முடிவில், இந்தியா (INDIA) கூட்டணி கட்சிகள் 2024 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.