தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாகக் கூறப்படும் நிலையில், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி ஆளுநர் விரைவில் மாற்றப்படலாம் என்று பிரஸ் மீட்டில் கூறியுள்ள கருத்து அரசியல் வட்டாரத்தில்  பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியாவில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்குகள் வாடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தெலங்கானா எனப் பல மாநிலங்கள் இதற்கு உதாரணம்.
அதேபோல், தமிழ்நாட்டில் ஆளுநருக்கும், திமுக அரசுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு சமீப காலமாக நிலவி வருகிறது. தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று அழைக்கவேண்டும் கூறியதோடு இல்லாமல், ஆவணங்களில் தமிழகம் என பயன்படுத்தவும் செய்தார் ஆளுநர் RN.ரவி. இந்த சர்ச்சை பெரிய தமிழ்நாட்டில் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியது. நடந்து முடிந்த, தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் போது, ஆளுநர் RN.ரவி அரசு தயாரித்துக் கொடுத்த உரையை முழுமையாக வாசிக்காமல், தன் இஷ்டப்படி சில பகுதிகளைத் தவிர்த்து வாசித்தது பெரும் சர்ச்சையைக் உருவாக்கியது. இதற்கு எதிர்வினையாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அக்கணமே ஆளுநர் உரை செல்லாது என தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இச்சூழலில் ஆளுநர் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியுள்ளதாவது. சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'தமிழ்நாடு ஆளுநர் RN.ரவி இப்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது. டெல்லி சென்று திரும்பியதில் இருந்தே மாநில அரசுக்கு எதிரான போக்கை அவர் கடைப்பிடிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.
தற்போதுள்ள ஆளுநர் RN.ரவிக்குப் பதிலாக, வேறு ஒருவரை நியமிக்க இருப்பதாகத் தகவல் வருகிறது' என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அவர், 'வடமாநிலங்களில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பீகாரில் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த ஆரம்பித்தே விட்டார்கள் என்றார். தமிழ்நாட்டிலும் சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்தவேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு செய்யவேண்டும்' என்றார். 
மேலும், அதிமுக மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், 'அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலை அவர்கள் சீக்கிரம் சரி செய்ய வேண்டும். இந்த பூசல் பாஜகவுக்கே சாதகமாக அமையும். அங்குள்ள இரு பிரிவுகளும், இப்போது பாஜகவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு காவடி தூக்குகிறார்கள். இது தமிழ்நாட்டிற்கும் நல்லதில்லை, அதிமுகவுக்கும் நல்லதில்லை என்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போட்டியிடுகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிச்சயம் பாடுபடும். சட்டசபைத் தேர்தல் சமயத்தில், திமுக கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றி வருகிறது. மேலும் நிறைவேற்றப்படாமல் இருக்கும் வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்த வலியுறுத்துவோம்' என்றார்.
 
   
  
கருத்துகள்
கருத்துரையிடுக