சர்ச்சை நாயகன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, உலகப் புகழ்பெற்ற அறிஞர்கள் மீது விமர்சனம் - தலைவர்கள் கடும் கண்டனம்
சர்ச்சை நாயகன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, இடதுசாரி சித்தாந்தத்தை உருவாக்கிய கார்ல் மார்க்சை விமர்சித்தது மீண்டும் இந்தியாவில் பெரும்பான்மை மக்களிடையே சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஆளுநர் ஆர்என் ரவியின் பேச்சுக்கு இந்திய இடதுசாரி எம்பி சு வெங்கடேசன் அவர்களும் மற்றும் இடதுசாரி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பங்கேற்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பேசுகின்ற, நரித்தனமான பேச்சுக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்துவது வழக்கம். பிற்போக்குத்தனமான சனாதன தர்மத்தை ஆதரித்து மூச்சுவிடாமல் மேடைகளில் முனகிவரும் ஆளுநர் ஆர்என் ரவி, தமிழர்களின் பெருமைமிகு நூலான திருக்குறளை சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்து வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்திய அறிஞர் ஜி யு போப்பை, தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கடுகளவு சம்பந்தமில்லாத ஆளுநர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தமிழ்நாடு என்பதை தமிழகம் என தமிழ்நாட்டு மக்கள் அழைக்கவேண்டும் என கருத்து தெரிவித்து அதன்பின் தமிழ்நாடு மக்களிடமிருந்து கடுமையான வசைகளும், எதிர்ப்புகளும் எழுந்தவுடன் பச்சோந்தியாக தனது நிலையை மாற்றிக்கொண்டார்.
இந்நிலையில் சென்னை ராஜ்பவனில் இந்துத்துவா கோட்பாட்டாளரின் நூல்கள் வெளியீட்டுவிழா நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்என் ரவி, சனாதன தர்மம் என்பது விரிவானது. தர்மம் என்பதை நாம் மதம் என புரிந்து கொண்டுவிட்டோம். அப்படி புரிந்து கொண்டதால் மாபெரும் தவறு செய்துவிட்டோம் என்றிருக்கிறார்.
மேலும், நமது இந்திய கொள்கைகள் மேற்கத்திய சிந்தனைகளை பின்பற்றுவதாக இருக்கிறது. "பூமியில் உயிரினங்களின் தோற்றம் பற்றிய மதவாதிகளின் நம்பிக்கைகள்" ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்கும் சார்லஸ் டார்வினின் கோட்பாடும், மூலதனம், உற்பத்தி, உழைப்புச்சுரண்டல், கொள்ளை லாபம் மற்றும் தொழிலாளி வர்க்க விடுதலை பற்றி பேசிய மார்க்சின் கோட்பாடும்தான் இந்தியாவை சீரழித்துவிட்டது எனவும் பேசியுள்ளார்.
உலகில் மதவாதிகளின் கையிலிருந்த ஆட்சி அதிகாரங்களை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களாட்சி அரசுகளுக்கு மாறுவதற்கு வழிவகை செய்த ரூசோவின் கோட்பாடு போன்றவையெல்லாம் இந்திய தேசிய வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டன என பிதற்றியுள்ளார். 
இந்தியாவில், விவசாயிகளுக்கான பிரச்சினைகள், பெண்களுக்கான பிரச்சினைகள், குழந்தைகளுக்கான பிரச்சினைகள், தொழிலாளர்களுக்கான பிரச்சினைகள், ஊழல் எதிர்ப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காக பல்வேறு தளங்களில் போராடிவரும் இந்திய இடதுசாரிகளின் ஆசானான "கார்ல் மார்க்சின் சிந்தனைகள்தான் இந்தியாவை சிதைத்துவிட்டது" என்றும் ஆளுநர் ஆர்என் ரவி கூறியுள்ளார்.
மார்க்ஸின் சித்தாந்தமானது இல்லாதவர்கள் மேலே உயர வேண்டும் என்கிறது. இது இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே மோதலை உருவாக்குகிறது. இது சமூகத்தில் பிளவுகளுக்கு காரணமாக அமைகிறது என்று விமர்சித்ததன் மூலம் ஆளுநர் ஆர்என் ரவி தனது வக்கிரமான பார்ப்பனிய குணாதிசயத்தை வெளிப்படுத்திவிட்டார்.
அதேபோல, உலகில் ஜனநாயகத்துக்கு உதாரணமாக ஆபிரகாம் லிங்கனை காட்டுகிற போக்கு இருக்கிறது. டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை மக்கள் பின்பற்றுகிறார்கள். இவை அனைத்துமே அறிவியலில் மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறிய மேற்கத்திய நாடுகளின் தத்துவங்களாகும். இந்திய பேராசிரியர்கள், இந்து தத்துவங்களை உயர்த்திப்பிடிக்காமல், மக்களின் அறிவிற்கும் முன்னேற்றத்திற்கும் துணை செய்யும் ஐரோப்பிய தத்துவங்களை, கோட்பாடுகளை உயர்த்திப்பிடிப்பது வேதனைக்குரியது என்கிற வகையில் ஆளுநர் ஆர்என் ரவி மேடையில் பேசி, தான் யாரென்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார்.
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக