இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கலவரம் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் - தொல் திருமாவளவன் (விசிக)
இந்திய நாடாளுமன்றத்தில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது வி.சி.க தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன், பாஜக ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களின் வலி, விரக்தி, ஏமாற்றம் ஆகியவற்றை வார்த்தைகளாக எதிரொலித்தார். திருமாவளவனின் வார்த்தைகள் மணிப்பூர் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல சமூகங்கள் எதிர்கொள்ளும் வேதனையை படம் பிடித்துக்காட்டின.
கலவர பூமியாக மாற்றப்பட்டுள்ள மணிப்பூரைப் பற்றி பேசி அவையின் கவனத்தை ஈர்த்த திருமாவளவன், வெறுப்புணர்வால் துண்டாடப்பட்டுள்ள குக்கி மற்றும் மைதேயி சமூகங்கள் குறித்து பேசினார். கலவரத்தில் பலியான எண்ணிலடங்காத உயிர்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் பற்றி பேசினார்.
மேலும், திருமாவளவன் அவர்கள், இந்திய பிரதமர் மோடி, மணிப்பூர் கலவரத்தைத் தடுத்து அப்பகுதி மக்களை பாதுகாக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
மணிப்பூரை விட்டு வெளியேறியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இந்தியாவின் பிற மாநிலங்களில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர் எனவும், மணிப்பூரைத் தொடர்ந்து ஹரியானாவிலும் முஸ்லிம் சமூக மக்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர் எனவும் திருமாவளவன் விவரித்தார்.
இந்தியாவில் சகிப்பின்மை மற்றும் வெறுப்பை நிலைநாட்டும் இந்துத்துவா அமைப்புகளின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருமாவளவன் விமர்சித்தார்.
ஜெய்ப்பூரில் ரயிலில், போலீஸ் அதிகாரி ஒருவரையும் மற்றும் முஸ்லிம்களையும் துப்பாக்கியால் குறிவைத்து கொன்றுவிட்டு, மோடியையும், யோகியையும் ஏற்காதவர்கள் இந்தியாவில் வாழ தகுதியற்றவர்கள் என ஆளும் பாஜகவுக்கு ஆதரவாக வெளிப்படையாக பேசிய ரயில் பாதுகாப்புக் காவலர் பற்றி திருமாவளவன் விவரித்தார்.
இந்தியாவில் மோடி ஆட்சியில், சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களான பெட்ரோல், சமையல் எரிவாயு மற்றும் தக்காளி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்துப் பேசியதுடன், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்கும் பாஜகவின் இருவேறு நிலைப்பாட்டை அவர் வெளிச்சம் போட்டுக் காட்டினார்.
திருமாவளவனின் உரையில், இந்திய தேசத்தை ஆட்டிப்படைக்கும் எண்ணற்ற பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி விலக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கருத்துகள்
கருத்துரையிடுக