தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (DMDK) நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் அவர்களுக்கு இறப்புக்குப் பின் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.
1952 ஆம் ஆண்டு மதுரையில் விஜயராஜ் அழகர்சுவாமியாகப் பிறந்த அவர், தனது திரைப் பெயர் விஜயகாந்த் மற்றும் பிரபலமான ‘கேப்டன்’ என்ற பெயரால் அறியப்பட்டார்.
2011 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். 40 வருடங்களாக 150 படங்களுக்கு மேல் நடித்த விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.
அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். அவருக்கு சிறப்பு செய்யும் விதமாக விருது அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில், உண்மைச் சரிபார்ப்பு (Fact Check) இணையதளமான Alt News இன் நிறுவனர் முகமது சுபைருக்கு தமிழ்நாடு அரசு ‘கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது’ வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சுபைர், மத நல்லிணக்கத்தை மேம்படுத்த பல்வேறு சேவைகளை செய்து வருகிறார் என்று தமிழ்நாடு அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
“முகமது ஜுபைர், ‘Alt News’ என்ற இணையதளத்தை உருவாக்கி, சமூக வலைதளங்களில் வரும் செய்திகளின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து, உண்மையான செய்திகளை தனது இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். சமூகத்தில் போலிச் செய்திகளால் ஏற்படக்கூடிய வன்முறை சம்பவங்களைத் தடுக்க அவரது பணி உதவுகிறது,” என்று தனது அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மார்ச் 2023 இல், தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த வடஇந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக ஊடகங்களில் வேகமாக வீடியோ பரவியது. அந்த வீடியோ காட்சிகளின் நம்பகத்தன்மையை சரிபார்த்த பிறகு, அதில் உள்ள காட்சிகள் பொய்யானது என்று சுபைர் தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டு தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் மீது தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை என வெளிப்படுத்தியதால் இந்தியாவில் அப்போது காணப்பட்ட அமைதியற்ற சூழல் சரிசெய்யப்பட்டது.
இந்த விருதுகளைப் பெற்ற இருவரையும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாராட்டியுள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக